என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் சமப்படுத்தும் பணி தடுத்து நிறுத்தம்

நெய்வேலி அருகே என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் சமப்படுத்தும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக நெய்வேலி அருகே உள்ள மேல்வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தியது.
இந்த நிலையில் கையகப்படுத்திய நிலங்களை சமப்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று நெய்வேலி அடுத்த கத்தாழை கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் என்.எல்.சி. அதிகாரிகள், ஊழியர்களை அழைத்து வந்தனர். இதுபற்றி அறிந்த கத்தாழை பகுதியில் உள்ள நிலத்தை கொடுத்த மும்முடி சோழகன் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கு விரைந்து வந்து நிலம் சமப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள், என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்திய 250 ஏக்கருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
அதற்கு அங்கிருந்த என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் போலீசார் நில எடுப்பு அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் அங்கிருந்து புறப்பட்டு நில எடுப்பு அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து கத்தாழை கிராமத்தில் என்.எல்.சி. கையகப்படுத்திய பகுதியில் நிலம் சமப்படுத்தும் பணி நடைபெற்றது. இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.