நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதி


நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க அனுமதி
x

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பியை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியே வந்து, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்தநிலையில் நிலமோசடி வழக்கில் கடந்த 2-ந்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வருகிற 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிலமோசடி வழக்கு தொடர்பாக சேகரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சேகரை நேரில் ஆஜர்படுத்தினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சேகரை 2 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனைதொடர்ந்து கரூர் காந்தி கிராமத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சேகரை அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story