குறவன், குறத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
குறவன் குறத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.
சென்னை,
கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்பட்டு வந்த குறவன் குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், இந்த ஆட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும், இழிவுபடுத்துவதாகவும், அமைந்துள்ளதாக அறிய வருகிறது. தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கலைப்பட்டியலில் இக்கலை இடம் பெற்றிருந்தாலும், இக்கலைப்பிரிவில் உறுப்பினராக எவரும் இதுவரை பதிவு செய்யவில்லை.
தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது எண்ணில் குறவன் குறத்தி ஆட்டம் இடம்பெற்றுள்ளது. இக்கலைப்பிரிவை நீக்கம் செய்து ஆணை வெளியிடுமாறும், கரகாட்டம் உட்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து ஆணை வழங்க, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைப்பிரிவு நீக்கம்
தமிழ்நாடு அரசு இதனை பரிசீலித்து, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் கொறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் 'குறவன் குறத்தி ஆட்டம்' என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு ஆணையிடுகிறது.
கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்தும் அரசு ஆணையிடுகிறது. இந்த உத்தரவை செயல்படுத்தவும், குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறும் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் அறிவுறுத்தப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.