கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை


கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை
x

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் பொருட்களிலான மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்திடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலம், ஜோத்பூரை சேர்ந்த ஜிகேந்தர் பிஸ்வால் (வயது 33) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இவரது மனைவி தற்போது ஒடிசாவில் உள்ளார். குழந்தைகள் ஏதும் இல்லை. கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வாடகை வீட்டில் தனது உறவினர்களோடு ஜிகேந்தர் பிஸ்வால் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தனியறையை உள்பக்கமாக பூட்டி கொண்டு ஜிகேந்தர் பிஸ்வால் தூங்கச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த வீட்டார் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜிகேந்தர் பிஸ்வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது இடது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் போலீசார் ஜிகேந்தர் பிஸ்வாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story