சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிறுவாபுரி முருகன் கோவிலில், ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல், வீரவேல்’ என்று பக்தி கோஷங்கள் முழங்க 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சின்னம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இங்கு பாலசுப்ரமணிய சாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றி பாடியுள்ளார். முருகம்மையார் என்ற பக்தர்களுக்கு முருக பெருமான் காட்சி கொடுத்த தலமாகும்.
சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள் பிரகாரத்தில் கம்பீரமான ராஜ கணபதி, அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேசுவரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள், கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் மற்றும் அருணாசலேசுவரர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இங்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து கடந்த 17-ந்தேதி கோவில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன், கோ பூஜை, நவக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் யாகசாலை பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் குடங்களில் புனித நீரை மேளதாளங்கள் முழங்க எடுத்து கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் விமான கோபுரங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல், வீரவேல்" என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில், மத்திய இணை-மந்திரி எல்.முருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டி.ஜே.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், துரை சந்திரசேகர், அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதவிர, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.