குலசை தசரா திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவில் 5-ம் நாளில் நவநீதகிருஷ்ணன் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நவநீதகிருஷ்ணர் கோலம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதனால் நூற்றுக்கணக்கனக்கான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.
முத்தாரம்மன் வீதியுலா
ஆறாம் திருவிழாவான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.