கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது - என்.சி.சி. விளக்கம்
போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன், என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான சிவராமன் என்.சி.சி பயிற்சிக்காக மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமன், பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
இந்நிலையில் போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி என்.சி.சி. நபர்களால் போலி என்.சி.சி. முகாமில் கலந்துகொள்ளும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஊடகங்களில் இன்று செய்தியாக வெளியானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தச் செய்தி ஒரு தெளிவற்ற தவறான தகவல் மற்றும் என்.சி.சி. பணியாளர்களின் ஈடுபாடு என தவறாக சித்தரிக்கப்பட்டு உண்மைகளை மறைக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.