கிருஷ்ணகிரி விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி என்.சி.சி. முகாம் நடத்த முடியும்..? - ஐகோர்ட்டு கேள்வி
கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாமில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை பள்ளி உரிமையாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரிய வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பில், "தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில் மாணவியின் பெயரைத் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் கூறி அடையாளத்தை அம்பலப்படுத்தி விட்டனர். விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசு மாணவிக்கு எந்த நிவாரணமும் வழங்க வில்லை" என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பின்னர் போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரிய வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
முன்னதாக வழக்கு விசாரணையின் போது, "பள்ளிக் கல்வி துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும்..?. பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..? என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "சம்பவம் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என பள்ளி தரப்பில் கூறியதால் மாணவிகள் புகார் அளிக்கவில்லை. ஒரு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெற்றோரிடம் கூற அவர்கள் புகார் அளித்துள்ளனர். சமூக நலத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது. பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.