ராகு, கேது பகவான் ஆலய கும்பாபிஷேக விழா


ராகு, கேது பகவான் ஆலய கும்பாபிஷேக விழா
x
திருப்பூர்


திருப்பூரில் சோழாபுரி அம்மன் கோவில் வளாக்தில் உள்ள ராகு, கேது பகவானுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவில்

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கல் மண்டப கோவில் இதுவாகும். சிதலமடைந்து இருந்த இந்த கோவிலை, திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராக இருந்த காலத்தில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கோவிலில் ஸ்ரீசோழாபுரி அம்மன் சாந்த சொரூபியாக உள்ளார்.

கோவில் வளாகத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட காசிவிஸ்வநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையம் முன்பு ஏற்கனவே இருந்த சுந்தரமூர்த்தி விநாயகர் சிலையும் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரே கல்லால் ஆன ராகு, கேது பகவான் சிலை கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. சோழாபுரி அம்மனுக்கு பவுர்ணமி பூஜை சிறப்பு வாய்ந்தது ஆகும்.

ராகு, கேது பகவானுக்கு கும்பாபிஷேகம்

இந்தநிலையில் ராகு, கேது பகவானுக்கு கோவில் வளாகத்தில், தனியாக கல் கோவில் மற்றும் கோபுர கலசம் அமைத்து கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்ட நிர்வாகி திலகராஜ் மற்றும் பக்தர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ராகு, கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தின் நகலை வைத்து பூஜை செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதாக தெரிவித்தனர்.


Next Story