சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணி அளவில் கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை சப்பரத்தில் எடுத்து தேர் நிலைக்கு கொண்டு வந்தனர். அங்கு தேரை 3 முறை வலம் வந்த பிறகு சாமிகள் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு காலை 6.15 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

வடம் பிடித்து இழுத்தனர்

இதில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக பக்தர்கள் தேரை இழுத்து வடக்கு ராஜவீதி சந்திப்பில் காலை 6.45 மணி அளவில் நிறுத்தினார்கள். தேரோட்டத்தை முன்னிட்டு அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில் மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பக்தர்கள் மீண்டும் தேரை வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்பட்டது.

இன்று தெப்ப தேரோட்டம்

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. மாலை 5 மணி அளவில் நடக்கும் மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, பெருந்துறை கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் கிராமம் மேட்டூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு தீர்த்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story