கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி
கோத்தகிரி தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
கோத்தகிரி தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதி போட்டி
கோத்தகிரி காந்தி மைதானத்தில் கோடநாடு கிரிக்கெட் கிளப் சார்பில், தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 50 அணிகள் கலந்துகொண்டன. காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் டேன்டீ அணியும், சிவகாமி எஸ்டேட் அணியும் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டேன்டீ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ராம் 39 ரன்கள், சவுந்தர் 28 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 120 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய சிவகாமி எஸ்டேட் அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் விக்கி 69 ரன்கள், பாரதி 38 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் சிவகாமி எஸ்டேட் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிக்கு முன்னேறியது
மற்றொரு போட்டியில் கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணியும், எஸ்.எம்.இ.எஸ் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் மணி 64 ரன்கள், கார்த்திக் 48 ரன்கள், பிரகாஷ் 46 ரன்கள், ராஜ் 41 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய எஸ்.எம்.இ.எஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டும் எடுத்தது. எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் பிரதீஷ், கோகுல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஒரு போட்டியில் கோத்தகிரி எம்.எஸ்.டி. லெவன்ஸ் அணியும், ஈளாடா சிவகாமி எஸ்டேட் அணியும் மோதுகிறது. மற்றொரு போட்டியில் அரவேனு டாப் கைஸ் மற்றும் டிரீம் லெவன் அணிகள் விளையாடுகிறது.