கிண்டி பன்னோக்கு ஆஸ்பத்திரி ஜூன் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கிண்டி பன்னோக்கு ஆஸ்பத்திரி ஜூன் மாதம் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் கிங் நிறுவன வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில், 4.89 ஏக்கர் பரப்பளவில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 1-ந்தேதி ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த ஆஸ்பத்திரில் 6 தளங்கள் கொண்டதாக கட்டுப்படுகிறது. மேலும், ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடியதாகவும் இது அமைய உள்ளது. அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை தரைதளத்தில் 75 சதவீதப் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தற்போது, இறுதிகட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கிங் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தரை தளம் அமைக்கும் பணிகள், அவசர அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் மருத்துவ வாயு குழாய்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர், கட்டுமான பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டுக்கு முன்பாக இந்த பன்னோக்கு ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, இந்த கட்டிடம் 3 பகுதியாக பிரித்து கட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளோம். ஏறத்தாள 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
மே 15-ந்தேதி கட்டிட பணியை முடித்து ஒப்படைத்துவிடுவோம் என்று ஒப்பந்ததாரர்கள் உத்திரவாதம் கொடுத்துள்ளார்கள். பகல், இரவு நேரம் என சிப்டு அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. கட்டிடப்பணிகள் சிறப்பாக இருக்கிறது. மேலும், கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3-ந்தேதி தொடங்க உள்ளது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆஸ்பத்திரி கட்டிடத்தை திறந்துவைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கும் தேதியில் ஆஸ்பத்திரி கட்டிடம் திறந்து வைக்கப்படும். இந்த ஆஸ்பத்திரிக்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், பொதுப்பணித்துறை சென்னை மண்டலத் தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.