ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை - குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல்


ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை - குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல்
x

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மொத்தம் 10 லட்சம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் பிடிக்கச்சென்ற போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றார். போலீசார் தற்காப்புக்காக திருப்பி சுட்டபோது, குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் பலியானார்.தொடர்ந்து இந்த கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் கடந்த 22-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக (ஏ1) நாகேந்திரனும், 2-வது குற்றவாளியாக (ஏ2) தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், 3-வது குற்றவாளியாக (ஏ3) ஆக அஸ்வத்தாமன் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , அரசியல் ரீதியாக , சமூகம் ரீதியாக வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங் ஒடுக்கவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்டு ரெக்கி ஆபரேஷன் நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆற்காடு சுரேஷ் மனைவி சபதத்தால் ஒரு ஆண்டுக்குள் கொலை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மொத்தம் 10 லட்சம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாகக் கைதானவர்கள் 63 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணமும் ரொக்கமாக 80 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story