அரிவாளை காட்டி மீனவர் காரில் கடத்தல்


அரிவாளை காட்டி மீனவர் காரில் கடத்தல்
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 1:13 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் அரிவாளை காட்டி மீனவரை காரில் கடத்தி சென்றவர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்து 3 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

முன்விரோதம்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 50). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மீனவர் மாரிச்சாமி (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கார்மேகத்தை, மாரிச்சாமி மகன் மாரீஸ்வரன் (23) என்பவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாரீஸ்வரன் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் தங்கி இருப்பதாக கார்மேகத்தின் மகன்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், நேற்று ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் கோட்டைப்பட்டினம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த மாரிச்சாமியிடம் உனது மகன் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

போலீசார் மடக்கி பிடித்தனர்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாரிச்சாமியை அரிவாளை காட்டி காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் அந்த காரை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்வதை அறிந்த மர்மகும்பல் மாற்று வழியாக சென்றனர்.

கானூர் அருகே வந்த போது அவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர். அப்போது மாரிச்சாமியை மர்மநபர்கள் அரிவாளால் கை, கால் பகுதியில் வெட்டி உள்ளனர். தொடர்ந்து மர்மநபர்கள் காரில் அங்கிருந்து வேகமாக சென்றனர். பின்னர் அவர்களை விரட்டி சென்ற ேபாலீசார் கண்ணாகூர் கண்மாயில் மடக்கி பிடித்தனர். காரில் வெட்டுகாயமடைந்த நிலையில் இருந்த மாரிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து மாரிச்சாமியை காரில் கடத்திய உச்சிப்புளி பகுதியை சேர்ந்த நாகு என்பவரின் மகன் பழனிகுமார் (31), கார்மேகம் மகன்கள் முனீஸ்குமார் (27), விஸ்வநாதன் (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் மீனவரை காரில் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story