சிட்லபாக்கம் பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிய பெண் குழந்தை ஆட்டோவில் கடத்தல் - ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சிட்லபாக்கம் பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிய பெண் குழந்தை கடத்தப்பட்டது. புகார் அளித்த ஒரு மணிநேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார், ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருமலை நகரை சேர்ந்தவர் வினோத். இவர், பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 4 வயதான மகள் வர்ஷா, நேற்று மாலை சக குழந்தைகளுடன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர், குழந்தை வர்ஷாவை ஆட்டோவில் கடத்திச்ெசன்றார். இதை பார்த்த சக குழந்தைகள் வர்ஷாவின் தந்தை வினோத்திடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வினோத், தனது குழந்தை கடத்தப்பட்டது குறித்து சிடலப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
வர்ஷா ஆட்டோவில் கடத்தி செல்லப்படும் காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் பதிவான ஆட்டோ எண்ணை வைத்து போலீசார், உடனடியாக வயர்லெஸ் மூலமாக தாம்பரம் மாநகர போலீசார் முழுவதுமாக உஷார்படுத்தப்பட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், சிட்லபாக்கம் இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி மற்றும் போலீசார் சிட்லபாக்கம் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் வழியாக வந்த ஆட்டோவில் குழந்தையை கடத்தி வந்தவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போக்குவரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமை காவலர் ஜலேந்திரன் மற்றும் முதல் நிலைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் ஆட்டோவை நிறுத்தி மடக்கி பிடித்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரனையில் அவர், குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்த சம்சுதின் (30) என்பதும், மது போதையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசாரை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.