சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா: தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை


சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா: தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 May 2024 11:28 PM GMT (Updated: 20 May 2024 4:45 AM GMT)

அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி தடுப்பணை கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை,

தமிழக எல்லையில் அமராவதி அணையின் பிரதான நீராதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு ஏற்படுகின்ற நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு அமராவதி அணையின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் சிலந்தி ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடங்கி உள்ளது. அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி தடுப்பணை கட்டப்படுகிறது. இது குறித்து விசாரிக்கையில் அந்த பகுதியில் அமைய உள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் நிறுவனத்திற்காக அந்த தடுப்பணை கட்டப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த தடுப்பணை கட்டப்படுவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்று விடக்கூடும். இதனால் அணையை ஆதாரமாகக் கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கி குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணியையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமராவதி பாசன விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று தெரிவித்தனர்.


Next Story