தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது .
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.