அவசர சிகிச்சைக்கு கர்நாடகா செல்லும் அவலம்: மருத்துவ வசதி இல்லாத மலைவாழ் கிராமங்கள்- தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆஸ்பத்திரியாக்கப்படுமா?


அவசர சிகிச்சைக்கு கர்நாடகா செல்லும் அவலம்: மருத்துவ வசதி இல்லாத மலைவாழ் கிராமங்கள்- தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆஸ்பத்திரியாக்கப்படுமா?

ஈரோடு

தாளவாடி மலைகிராமங்களில் மருத்துவ வசதி இல்லாமல் இங்குள்ள மக்கள் கர்நாடகா செல்கிறார்கள். அதனால் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆஸ்பத்திரியாக்கப்படுமா? என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாளவாடி மலைப்பகுதி

தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்களின் தொழிலாக விவசாயம் உள்ளது. வேறு எந்த தொழிலும் இல்லை. விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர்

தாளவாடி தனி தாலுகாவாகி கடந்து 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தாளவாடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் தரம் உயர்த்தப்படவில்லை. இப்பகுதியை சேர்ந்த மக்கள் சிறு தலைவலி, காய்ச்சல், விபத்து, ஏற்பட்டால் கூட தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் செல்ல வேண்டும்.

போதிய வசதிகள் இல்லை

ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் எதுவும் இல்லை. இதனால் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி அல்லது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பிரேத பரிசோதனை அறை கூட தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை. இதனால் மலைப்பகுதியை சேர்ந்த ஏழை மக்கள் மிகவும் துன்பத்துக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மகப்பேறு காலத்தில் தாய் சேய் நலம் காத்திட வேண்டும். அமரர் ஊர்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மலைக்கிராம மக்கள் வைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறிய பல்வேறு கருத்துகள் விவரம் வருமாறு:-

சாம்ராஜ்நகருக்கு செல்கிறோம்

தாளவாடியை சேர்ந்த ஹரிஷ்குமார்:-

ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றால் அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விடுகின்றனர். அங்கு சென்றால் இந்த காயத்துக்கு கூட சிகிச்சை அளிக்க உங்கள் ஊரில் டாக்டர்கள் இல்லையா என தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிப்பு

தாளவாடி மீர்முஹிப்புல்லா:-

தாளவாடியை தனி தாலுகாவாக அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் போதிய எண்ணிக்கையிலான டாக்டர்கள் இல்லாமல் முறையான சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறோம்.

கர்ப்பிணிகளின் நிலை

தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த சுலோச்சனா:-

கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகிறார்கள். இதில் குழந்தை பிறப்பதில் ஏதாவது சிறு பிரச்சினை இருந்தால் கூட அவர்களை சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுகின்றனர். சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமானால் 60 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் பயணிக்க வேண்டும்.

அதுவும் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சில நேரங்களில் ஆம்புலன்சில் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே விரைவாக தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக மாற்ற வேண்டும்.

செலவு அதிகம்

மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த தேவா:-

தாளவாடி மலைப்பகுதியில் விபத்து ஏற்பட்டு அல்லது வேறு காரணத்தால் ஒருவர் உயிரிழந்தால் பிரேத பரிசோதனை செய்ய சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிதான் செல்ல வேண்டும். இதற்காக 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே மலைக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story