தமிழ் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா?- கலைஞர்கள் கருத்து


தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:45 PM GMT)

தமிழ் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா?- கலைஞர்கள் கருத்து

ஈரோடு

இசைக்கு மொழி இல்லை. பிரபஞ்சம் முழுவதும் இசையால் நிரம்பியது. பழங்கால இலக்கியங்கள் இசை வடிவம் சார்ந்ததாகவே தமிழில் அமைந்து உள்ளன. அதுமட்டுமின்றி, உலகில் எங்கும் இல்லாத வகையில் இசை கல்வெட்டு தமிழில்தான் கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த இசை கல்வெட்டு ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நாகமலையில் உள்ள சிறு குகையில் இன்றும் உள்ளது. எனவே தமிழர்கள் இசையை கொண்டாடி இருக்கிறார்கள் என்பது கல்வெட்டு முதல் அன்றாட வாழ்வியல் வரை தெரிகிறது.

பிறப்பு முதல் மரணம் வரை இசை நம்மை தொடர்கிறது. நாட்டுப்புற கலை, மேற்கத்திய கலை ஆகியவற்றுடன் கர்நாடக சங்கீதம், பரதம் என்று கலை வடிவங்கள் நமக்கு தெரியும்.

தமிழ் இசை

தமிழக அரசு இந்த கலைகளை குறிப்பாக இசைக்கலையை வளர்த்தெடுக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும் அரசு இசைப்பள்ளிகளை நடத்துகிறது. தமிழ்நாடு அரசின் கலைபண்பாட்டு துறையின் கீழ் இந்த இசைப்பள்ளிகள் இயங்குகின்றன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் முன்னாள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு இசைப்பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் 23-வது ஆண்டு விழா மற்றும் தமிழ் இசை விழா ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாட்டில் தமிழ் இசை விழா கொண்டாட்டம் ஒரு சாதாரண நிகழ்வாகவே கடந்து போனது. தமிழ் இசை வேண்டும். தமிழில் குடமுழுக்கு வேண்டும். தமிழ் பாடல்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதும், போராட்டங்கள் நிகழ்வதும் அன்றாடம் பார்க்கும், கேட்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன. ஆனால், தமிழ் இசை விழா என்ற பெயரில் நடந்த ஒரு இசை சங்கமத்தில் அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் தமிழ் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா?, இசைப்பள்ளியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து இசை கலைஞர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பரதநாட்டியம்

இசைப்பள்ளி மாணவி சர்மிளா ராஜூ கூறியதாவது:-

நான் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளேன். எனக்கு சிறுவயது முதலே பரத நாட்டியத்தில் ஆர்வம் உண்டு. அதுமட்டுமின்றி எனது தந்தைக்கும் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம். அவர் கமலஹாசனின் தீவிர ரசிகர். சலங்கை ஒலி படம் பார்த்து நடனம் ஆட கற்றுக்கொண்டார். தற்போது பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். அவரது ஆசையின் படி நானும் நடனத்தில் தீவிர கவனம் செலுத்தினேன். தற்போது நான் பணியாற்றும் நிறுவனம் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்து இருப்பதால் நான் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து முதல் ஆண்டினை நிறைவு செய்து விட்டேன். எனக்கு தற்போது 25 வயதாகிறது. இந்த வயதிலும் ஒரு பள்ளியில் சேர்ந்து படிப்பது அதுவும் நடனம் படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு எனக்கு மாதம் தோறும் தமிழ்நாடு அரசு ரூ.400 அளிக்கிறது. நாங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் இலவசமாகவே அரசு வழங்குகிறது.

தேவாரம்

ஈரோடு கோட்டை கண்ணகி வீதியை சேர்ந்த எம்.திரிஷா என்கிற திரிபுவனசுந்தரி:-

நான் ஈரோடு அரசு இசைப்பள்ளியில் தேவாரம் கற்று வருகிறேன். இந்த படிப்பு முடிந்ததும் அறநிலையத்துறை கோவில்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி உள்ளனர். எனது அம்மா தேவாரம் பாட 5 வயதில் இருந்தே எனக்கும் கற்றுத்தந்தார். மேலும் அரசு இசைப்பள்ளியில் தேவாரம் கற்றுக்கொடுத்து, சான்றிதழ் அளிப்பதாக கூறினார். அதன்படி எனது 18-வது வயதில் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்தேன். படிக்கும்போதே பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் தேவாரம் பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக செல்லும்போது மக்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார்கள். தமிழ் இசை கற்பதால் எத்தனை மரியாதை என்கிற மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமானுக்கு பணி செய்வதுடன் கூடுதலாக தேவாரம் இசைத்து பணிசெய்வது இன்னும் எனக்கு மகிழ்ச்சியாகும். அதுமட்டுமின்றி, முன்பு ஆண்கள் மட்டுமே தேவாரம் படிக்க முடிந்தது. ஆனால் அரசு இசைப்பள்ளியில் பெண்களுக்கும் கற்றுத்தந்து சான்றிதழ் வழங்குவதால் என்னைப்போன்றவர்கள் படிக்க முடிகிறது.

நாதஸ்வர கலைஞர்

கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்த ப.திருவேங்கடசாமி:-

சிறு வயதிலேயே எனது தந்தை எனக்கு நாதஸ்வரம் வாசிக்க கற்றுத்தந்தார். திண்டல் வேலாயுதசாமி (முருகன்) கோவிலில் நாதஸ்வர கலைஞராக அரசு வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். இதுதவிர ஏராளமான கச்சேரிகளுக்கும் செல்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் இசை கலைஞர்களுக்கு அரசு விழாக்களில் நல்ல மரியாதை அளிக்கப்படுகிறது. அரசின் கண்காட்சி மற்றும் விழாக்களில் நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், தமிழ் இசை தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இசை ஆர்வம் உள்ள ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊக்கத்தொகையுடன் விரும்பும் கலையை கற்றுக்கொள்ள அரசு இசைப்பள்ளி உதவுகிறது. தொடக்கத்தில் நாங்கள் ஏதேனும் நிகழ்ச்சியில் மேடையின் ஓரத்தில் சம்பிரதாயத்துக்காக இசை நிகழ்ச்சி நடத்துவோம். நாதஸ்வர இசையை ரசிப்பவர்கள், அதை திறம்பட வாசிக்கும் கலைஞர்களாகிய எங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இப்போது அரசு நிகழ்ச்சிகளிலேயே மேடை ஏறுகிறபோது, பலரும் இசையை ரசித்து எங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிறபோது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

அரசு இசைப்பள்ளி

ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.நா.சத்தியமூர்த்தி கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு தமிழ் இசைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டது. 23 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டன. இதையொட்டி கலைபண்பாட்டுத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட தமிழ் இசை விழாவில் எங்கள் பள்ளியில் படிக்கும் 100 மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு விருந்தினர்களாக கலை வித்தகர்கள் பங்கேற்றனர்.

இன்னும் இந்த இசை விழாவை மேம்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கும் என்று நம்புகிறோம். நமது அரசு இசைப்பள்ளியில் குரல் இசை, நாதஸ்வரம், தவில், பரத நாட்டியம், வயலின், மிருதங்கம், தேவாரம் என்று 7 வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 7 துறைகளுக்கும் 7 ஆசிரியர்களும் உள்ளனர். 12 வயது முதல் 25 வயது வரையான இசை மீது ஆர்வம் உள்ள ஆண்-பெண் இருபாலரும் இசைப்பள்ளியில் சேரலாம். 3 ஆண்டுகள் வகுப்பு நடைபெறும். இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.400 தமிழ்நாடு அரசு மூலம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முடிந்ததும் உரிய கல்விக்கான சான்றிதழ்கள் அளிப்பதுடன், வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் வளாகதேர்வு நடைபெற உள்ளது. அரசு இசைப்பள்ளியில் படித்து சான்றிதழ் பெற்றவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் இசை மற்றும் நடன ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள், தேவாரம் ஓதுபவர் பணியும் கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது. தற்போது அரசு விழாக்களில் இசைப்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story