மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்: செல்போன்கள் மூலம் நூதன மோசடி- பொதுமக்கள் கருத்து


மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்: செல்போன்கள் மூலம் நூதன மோசடி- பொதுமக்கள் கருத்து

ஈரோடு

ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'நகருக்கு மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

பணம் அபேஸ்

அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் மாவட்டமாகவே உள்ளது. குறிப்பாக வங்கி கடன்கள் தொடர்பான சிக்கல்களில் பலரும் மாட்டிக்கொள்கிறார்கள். வியாபாரிகள், பெண்கள் இந்த பிரச்சினையில் எளிதில் சிக்குவதால், அவர்களை குறிவைத்தே மோசடி கும்பல்களை சேர்ந்தவர்கள் தங்கள் வலையை விரிக்கிறார்கள். இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-

வியாபாரி

ஈரோட்டை சேர்ந்த வியாபாரி சி.வினோத் ஷிவானி:-

கடந்த ஜூலை மாதம் எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். என்னிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறிய அவரிடம், அதற்கான மொத்த தொகையை கூறினேன். ராணுவத்தில் பணம் செலுத்த சில நடைமுறைகள் உள்ளன. எனவே எங்கள் தனி செயலியில் இருந்து 2 ரூபாய் அனுப்புகிறேன். அது உங்கள் கணக்கில் வந்து விட்டால், உங்களுக்கு வரும் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் பணம் உங்களுக்கு வந்து விடும் என்றார். அதன்படி நான் செய்தேன். எனது கணக்கில் இருந்து ரூ.22 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டது. அதை சொன்னதும், ஏதோ பிரச்சினை போல இருக்கிறது. எனவே மீண்டும் ஒரு லிங்க் வரும் அதில் ஸ்கேன் செய்யும்படி கூறினார். இப்படி மொத்தம் ரூ.96 ஆயிரத்து 720 எனது கணக்கில் இருந்து எடுத்துவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்். அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அதைத்தொடர்ந்து ஈரோடு சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தேன். 5 மாதங்கள் கடந்த பிறகு கடந்த ஜனவரி மாதம் நான் இழந்த தொகை எனது கணக்கில் வரவு வைக்கப்பட்டது. எனவே ராணுவவீரர்கள் பேசுவதாக கூறி பொருட்கள் வாங்குவதாக கூறினால் யாரும் நம்ப வேண்டாம்.

மோசடிகள்

ஈரோடு வக்கீல் ஹரிசங்கர் கூறியதாவது:-

ரிசர்வ் வங்கி உள்பட எந்த வங்கியும் ஓ.டி.பி. (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்) கேட்பது இல்லை. எனவே யாரிடமும் வங்கி விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு எண் விவரங்களை பகிரக்கூடாது. இதுபற்றிய விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும். பிரபலங்களிடம் பெண்களை வைத்து பேசி, அதை பதிவு செய்து மிரட்டும் செயல்களும் நடக்கின்றன. இப்படி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் அவமானம் கருதி, வெளியில் சொல்லாமல் இருப்பதே ஏமாற்று மோசடி பேர்வழிகளுக்கு பலமாக உள்ளது.

சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் தாலுகா அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொழில்நுட்பங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

படித்தவர்கள்தான் ஏமாறுகிறார்கள்

சென்னிமலையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை டி.செந்தில்நாயகி சாமிதுரை:-

செல்போன்களில் வரும் அழைப்பை நம்பி பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாந்து வருகின்றனர். நம்மை நன்கு அறிந்தவர்களே நமக்கு உதவ யோசிக்கும் போது முன்பின் தெரியாதவர்கள் எப்படி நமக்கு உதவுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தால் ஏமாறுவதை தவிர்க்கலாம்.

சில சமயங்களில் ஏதோ அவசர அழைப்பாக இருக்குமோ? என்று பதற்றத்தில் செல்போனை எடுத்துப் பேசினால், மறுமுனையில் பேசும் நபர், கடன் வேண்டுமா? வீடு வேண்டுமா? என்று கேட்கும்போது சட்டென்று கோபம் வந்து விடுகிறது. எனினும் சமாளித்துக்கொண்டு வேண்டாம் என்று சொல்லி அழைப்பை துண்டித்தாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற அழைப்புகள் வந்து எரிச்சலூட்டுகின்றன. மக்கள் நிம்மதியை சீர்குலைக்கும் இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வருவதை தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

345 புகார்கள்

ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.ஜானகிராம் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் செல்போன், ஆன்லைன் மோசடி தொடர்பாக 345 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 314 புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு உள்ளது. 3 வழக்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புகார்களில் பெரும்பான்மையானவை கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை தெரிந்து கொள்ளும் பதிவேற்றத்தை தவறாக பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளாகும். பான் எண் (வருமானவரி எண்) காலாவதியாகி விட்டது. ஏ.டி.எம். எண் காலாவதியாகி விட்டது என்று பல்வேறு காரணங்களை கூறி ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் அதனுடன் தொடர்ந்து வரும் ஓ.டி.பி. பெற்று பணம் மோசடி செய்வது என எண்ணற்ற முறைகளில் மோசடிகள் நடக்கின்றன. ஒரு வழக்கில் ஈரோடு சைபர் குற்ற போலீசார் குற்றவாளிகளை பின்தொடர்ந்து சென்றபோது செல்போன் சிக்னல் ராஜஸ்தானில் காட்டியது. வங்கி கணக்கு கேரளாவில் இருந்தது. சிம் கார்டு ஒடிசாவில் வாங்கப்பட்டு இருந்தது. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒருவர் ஏமாற்றப்பட்ட விவரம் தெரிந்த உடனடியாக புகார் கொடுத்து விட்டால் ஓரளவு இழந்த பணத்தையாவது மீட்க முடியும். அதே நேரம் தேவையற்ற எந்த ஒரு செயலியையும் செல்போனில் பதிவிறக்கம் செய்வது, நமக்கு தொடர்பு இல்லாத அழைப்புகள், குறுந்தகவல்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது. யாராக இருந்தாலும் நமது ரகசிய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் கூறக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story