உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்- மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து


உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்- மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து

ஈரோடு

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிகரிப்பு

தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

டாக்டர் எஸ்.சரண்யா

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த நுரையீரல் நிபுணர் டாக்டர் எஸ்.சரண்யா கூறியதாவது:-

புகை பிடித்தலின் மூலம் உடல், மனம் மற்றும் சமூக மதிப்பில் பாதிப்பு ஏற்படும். புகை பிடிப்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு உடல் ரீதியாக ஒரே மாதிரியான பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு இன்னும் அதிகமாக கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படும். குழந்தை பேறு இல்லாத நிலைக்கு ஆளாவார்கள். ஒருவேளை கருவுற்றாலும், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

35 வயதிலேயே மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படும். மூளை பாதிக்கப்படும். வயிறு, தொண்டையில் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. அல்சர் நோய் பாதிப்பு வரும். கால்பகுதியில் ரத்தநாளங்கள் சுருங்கிவிடும். கால்வலி ஏற்படுவதுடன், ரத்த ஓட்டம் குறைவதால், புண்கள் வந்தால் ஆறாத நிலை ஏற்படும். இது புகை பிடிப்பவர்களுக்கு நேரடியாக வரும் பாதிப்புகளாகும்.

புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் இந்த பாதிப்புகளுக்கு கட்டாயமாக ஆளாவார்கள். வீடுகளில் பெரியவர்கள் புகைப்பிடித்தால், அதை பார்க்கும் குழந்தைகள் எளிதாக இந்த பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள். புகை பிடித்தல் என்பது ஒரு சமூக பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கமாகும். எனவே புகைப்பழக்கத்துக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசும், பொதுமக்களும் இணைந்து புகைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி புகையை ஒழிப்பது உண்மையிலேயே மனித நேய செயலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேராசிரியை மல்லிகா

பெருந்துறையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்க மைய பேராசிரியை ரா.மல்லிகா கூறியதாவது:-

புகைப்பழக்கம் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும். சமீப காலமாக பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும். புகைபிடிக்கும்போது நிகோடின் என்கிற நச்சுப்பொருள் முக்கிய போதையாக செயல்படுகிறது. புகைப்பவர்களின் மனநிலை, உடல்நிலையை பாதிப்பதுடன், உடன் இருக்கும் மற்றவர்களுக்கும் இது பாதிப்பாகும். புகைபழக்கத்தால் சுற்றுச்சூழல் கெடுகிறது. புகை பிடிப்பவர்களின் நுரையீரல் முழுமையாக பாதிக்கப்படும். உடல்நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே புகையை தவிர்ப்பதன் மூலம் மனித உயிர்களை பாதுகாக்கவேண்டியது கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈ.எம்.அசோக்

ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவரும், பாலியல் மற்றும் மனநல ஆலோசகருமான ஈ.எம்.அசோக் கூறியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெரு நகரங்களில் உள்ள பெண்கள் மட்டுமே போதை மற்றும் புகை பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதாக நினைத்தோம். ஆனால், புகை பிடித்தால் உடலில் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படும் என்ற நிலை இருப்பதுபோல, பெரு நகரங்களில் இருந்து வேர் விட்டு புகைப்பழக்கம் என்னும் புற்றுநோய் ஈரோடு போன்ற சிறிய நகரங்களையும் பிடித்து ஆட்டி வருகிறது. குழந்தைகள், பெண்கள் தொடர்பான ஆய்வுகளை அதிகம் மேற்கொண்டு வருவதாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி வருவதாலும் போதை மற்றும் புகையால் வாழ்க்கை சீரழிந்து வாடும் இளம் பெண்கள் பலரை அறிந்து இருக்கிறேன்.

போதைக்கு அடிமையாகி பள்ளிக்கூடத்தை பாதியிலேயே விட்டு வாழ்க்கையை தொலைத்த பெண்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கான அடிப்படையை பார்த்தால், புகை மற்றும் போதை பழக்க வழக்கங்கள் பெற்றோரிடம் இருந்தே குழந்தைகளுக்கு செல்கிறது. கடினமான தொழில் செய்கிறோம். உடல் அசதிக்காக போதை பயன்படுத்துகிறோம் என்று கூறும் பெற்றோரின் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் பெண்கள் தங்கள் கணவர்களிடம் இருந்து மது வாங்கி குடிப்பது, புகைப்பது என்பது பல குடும்பங்களில் உள்ளது. இதை நேரடியாக பார்க்கும் பெண் குழந்தைகளுக்கு இது தவறு இல்லை என்ற மனநிலை ஏற்படுகிறது. வளர் இனம் பருவத்தில் இதுபற்றி சிந்திக்கும் குழந்தைகள், வீதியில் புகை பிடித்துச்செல்லும் வாலிபர்களை பார்த்து மதி மயங்குகிறார்கள். தங்களுடன் நட்பில் இருக்கும் ஆண்களிடம் சகஜமாக பேசுவதுபோல, போதை, புகை பற்றி பேசுகிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் வாலிபர்கள் போதை பொருட்களை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில், போதைக்கு அடிமையாகும் பெண் குழந்தைகளின் கற்பை சூறையாடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. ஈரோட்டில் பல இடங்களில் மிக எளிதாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. பெண்கள், தங்கள் தந்தை, சகோதரனுக்கு என்று புகை பொருட்களை எளிதாக வாங்கி செல்கிறார்கள். பிரியாணி கடை என்ற பெயரில் கூட போதை மருந்து விற்பனை மையங்கள் செயல்படுகின்றன. இது போலீசாருக்கும் தெரியும். ஆனால் நடவடிக்கை எடுக்க யாரும் முன்வருவதில்லை.

வருங்கால தலைமுறையை பாதுகாக்க வேண்டும் என்றால் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இளம்பெண்கள், இளைஞர்களை பாதுகாக்க அரசு இரும்புக்கரம் கொண்டு போதை நடமாட்டத்தை தடுக்க வேண்டும். புகை விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story