விவசாயிகளை வியாபாரியாக்கிய உழவர் சந்தைகள் பயன் அளிக்கிறதா?- ஈரோடு மக்கள் கருத்து


விவசாயிகளை வியாபாரியாக்கிய உழவர் சந்தைகள் பயன் அளிக்கிறதா?- ஈரோடு மக்கள் கருத்து

ஈரோடு

கடந்த 1998-ம் ஆண்டு முதல் -அமைச்சராக கருணாநிதி இருந்தபோது தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தை

மதுரையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 103 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. பின்னர் 2006-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் பல இடங்களில் புதிய உழவர் சந்தைகளை திறந்து உள்ளார்.

ஈரோட்டில்

தமிழ்நாட்டில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்ட 1999-2000 ஆண்டின் போதே ஈரோடு மாவட்டத்தில் சம்பத்நகர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தற்போது 134 கடைகளுடன் சம்பத்நகர் உழவர் சந்தை இயங்குகிறது. தொடர்ந்து ஈரோடு பெரியார் நகர், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. புதிதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாளவாடியில் 16 கடைகளுடன் கூடிய புதிய உழவர் சந்தை தொடங்கப்பட்டது. சம்பத்நகரில் 134 கடைகள், பெரியார் நகரில் 40 கடைகள், கோபியில் 48 கடைகள், சத்தியமங்கலத்தில் 52 கடைகள், பெருந்துறையில் 40 கடைகள் என ஏற்கனவே உள்ளன.

சம்பத்நகர் சந்தையில் பதிவு செய்து இருக்கும் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 250 பேர். பெரியார் நகரில் 70 பேர், பெருந்துறையில் 20 பேர், சத்தியமங்கலத்தில் 106 பேர், கோபியில் 118 பேர் என விவசாயிகள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

வசதிகள்

சம்பத்நகர் சந்தைக்கு தினசரி சராசரியாக 120 விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். சராசரியாக தினமும் 20 டன் முதல் 25 டன் வரை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த உழவர் சந்தையை பொறுத்தவரை வாழைக்காய்கள், வாழைப்பழங்கள் அதிக அளவில் வருகின்றன. பால், தயிர், நெய் உள்ளிட்டவையும் இங்கு விவசாயிகளின் நேரடி உற்பத்தியாக கிடைக்கிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கிச்செல்கிறார்கள்.

தினமும் காலை 5.30 மணி முதல் உழவர் சந்தைகள் இயங்க தொடங்குகின்றன. மாவட்ட வேளாண்மைத்துறையின் விற்பனைக்குழு மூலம் அதிகாரிகள் சந்தை நிர்வாகம் செய்து வருகிறார்கள். சந்தையில் பதிவு பெற்ற விவசாயிகள் பொருட்கள் எடுத்து வரும் அரசு டவுன்பஸ்களில் இலவச பாரம் ஏற்றும் வசதி உள்ளது. உழவர் சந்தைவரை இந்த பஸ்கள் வந்து செல்கின்றன. தராசு, எடை கற்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடைக்கு வாடகை கிடையாது. குடிதண்ணீர் வசதி, பொருட்கள் வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

புதுப்பிக்கப்படுகின்றன

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்துவரும் விவசாயி ஆர்.சிவசுப்பிரமணி என்பவர் கூறியதாவது:-

உழவர் சந்தை தொடங்கியது முதல் இந்த சந்தைக்கு விற்பனைக்கு பொருட்கள் கொண்டு வருகிறேன். வெள்ளரி, பப்பாளி, பீர்க்கங்காய், நாட்டு கொத்தமல்லி, வாழைத்தண்டு, அனைத்து வகை கீரைகளும் கொண்டு வருகிறேன். இங்கு தினமும் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்குகிறார்கள். இது சற்று சிரமமாக உள்ளது. பஸ்சில் பொருட்கள் ஏற்றி வர இலவசம் உண்டு. ஆனால் ஒரே நபராக சந்தைக்கு வரும்போது தனியாக பஸ்சில் பொருட்கள் ஏற்றி இறக்க முடியாது. அதற்கு கூலி கொடுப்பதற்கு, சொந்த வாகனத்திலேயே வந்து விடலாம் என்ற நிலை இருக்கிறது.

சந்தைக்குள் விவசாயிகள் காலையிலேயே வந்து இருக்கிறோம். டீக்கடை வசதி இல்லை. எனவே வளாகத்தில் ஒரு டீக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறைகள் மிக மோசமான நிலையில் இருந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இப்போது நல்ல முறையில் உள்ளன. தினமும் தரமான காய்கள், கீரைகள் கொண்டு வருகிறோம். கொரோனாவுக்கு முன்பு 300 கட்டு கீரைவரை விற்பனை ஆனது. இப்போது 100 கட்டுகள் போவதே சிரமாக இருக்கிறது. உழவர் சந்தையை ஒட்டி வியாபாரிகள் அதிக அளவில் கடை வைத்து இருப்பதால் நிறையபேர் அதுதான் உழவர் சந்தை என்று நினைத்து அங்கேயே பொருட்கள் வாங்கிவிட்டு செல்கிறார்கள். எனவே விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புத்தம் புதிய கீரைகள்

இங்கு தொடக்கம் முதலே பொருட்கள் வாங்கிச்செல்லும் இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்த ஜெ.பெரியசாமி என்பவர் கூறியதாவது:-

நான் 20 ஆண்டுகளாக இங்கு தினசரி கீரை, தண்டு, காய்கள் வாங்குகிறேன். கீரை, தண்டு ஆகியவை வெளி மார்க்கெட் அல்லது சாலையோர கடைகளில் கிடைக்கும் விலையை விட குறைவாகவே உள்ளது.

இதுபோல் இயற்கை முறையில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தை விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதுபோல் நாட்டுக்கோழி முட்டைகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். வெளி சந்தையில் தரமான நாட்டுக்கோழி முட்டைகள் கிடைப்பதில்லை. எனவே இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை

மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்யா தங்கவேல் என்பவர் கூறியதாவது:-

சம்பத்நகர் உழவர் சந்தைக்கு பல ஆண்டுகளாக வந்து பொருட்கள் வாங்கி வருகிறேன். காய்கறிகள், கீரைகள் அதிக அளவு கிடைக்கிறது. புதியவையாகவும், தரமானவையாகவும் உள்ளன. முன்பை விட இப்போது பொருட்களின் விலை சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. வெளி மார்க்கெட் விலையில் இருந்து விலையை மிகவும் குறைத்து விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக பால் விலை மிகவும் அதிகமாக உள்ளது. பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தை பொருட்களின் தரத்தில் எந்த குறையும் கூற முடியாது. விலை மட்டும் குறைத்தால் கண்டிப்பாக இன்னும் ஏராளமானவர்கள் உழவர் சந்தையை பயன்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோபி

கோபி மொடச்சூரில் உள்ள உழவர் சந்தையில் காய்கள் விற்பனை செய்யும் விவசாயி சோமசுந்தரம் என்பவர் கூறியதாவது:-

நான் எனது தோட்டத்தில் விளையும் காய்கள், வெளியில் இருந்து காய்கள் வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தேன். அப்போது மிகவும் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தையில் பதிவு செய்தேன். தொடர்ந்து எனது தோட்டத்தில் விளையும் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். தற்போது லாபம் கிடைக்கிறது. கோபி உழவர் சந்தை அதிகாரி ராமகிருஷ்ணன் விவசாயிகளுக்கு சிறந்த வழிகாட்டுதல்கள் செய்து வருகிறார். உழவர் சந்தையில் ஆடவர் சுயஉதவிக்குழு மூலமும் அனைத்து வகை காய்கறிகள் விற்பனை செய்து வருகிறோம். தற்போது உழவர் சந்தை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெருந்துறை

பெருந்துறை உழவர் சந்தை குறித்து அங்கு ஜவுளிக்கடை நடத்தி வரும் சாதிக் பாஷா என்பவர் கூறியதாவது:-

2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி வந்ததுமுதல் உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்படவில்லை. அதிகாரிகளும் உழவர் சந்தைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் வருகை குறைந்தது. பொதுமக்களும் வரவில்லை. எனவே கடந்த 5 ஆண்டுகளாக இங்கு உழவர் சந்தை செயல்படவில்லை. தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளை சந்தைக்கு மீண்டும் ஊக்கப்படுத்தி அழைத்து வருவதில், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சந்தையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உள்ள உழவர் சந்தை குறித்து இங்கு கடந்த 16 ஆண்டுகளாக காய்கறி விற்பனை செய்து வரும் தமயந்தி கூறியதாவது:-விவசாயிகளை வியாபாரியாக்கிய உழவர் சந்தைகள் பயன் அளிக்கிறதா?- ஈரோடு மக்கள் கருத்து

விவசாயிகளை வியாபாரியாக்கிய உழவர் சந்தைகள் பயன் அளிக்கிறதா?- ஈரோடு மக்கள் கருத்து

உழவர் சந்தையில் தொடக்க காலத்தில் 52 கடைகள் இயங்கின. தற்போது 16 கடைகள் மட்டுமே இயங்குகின்றன. சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்திலிருந்து விவசாயிகள் தற்போது குறைந்த அளவிலேயே பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதனால் பொதுமக்களும் குறைவாகவே வருகிறார்கள். 3 கடைகளில் வாழைப்பழங்கள் மட்டுமே விற்கப்படும். மீதமுள்ள கடைகளில் காய்கறிகள் விற்பனை உள்ளது. மிக மோசமான நிலையில் இருந்த கழிவறைகளை தற்போது பழுது பார்க்கும் பணிகள் நடக்கிறது. அனைத்து காய்கறிகளுமே ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை விலை குறைவாக கிடைப்பதால் சமீபகாலமாக பலரும் புதிதாக வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story