கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு செல்லும்


கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு செல்லும்
x

கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு செல்கிறது.

கரூர்

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

6,000 கனஅடி நீர்

இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 4,643 கனஅடி தண்ணீர் வந்தது. இதனையடுத்து அமராவதி அணையில் இருந்து 5,492 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. காலை 10 மணி நிலவரப்படி 3,855 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையிருந்து 6,000 கனஅடி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 3,000 கனஅடியாகவும், 4.30 மணியளவில் 4,818 கனஅடியாகவும் வந்தது. தொடர்ந்து 5 மணியளவில் 7,673 கனஅடியாக உயர்ந்தது. இதனால் கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அதனை கரூர் அமராவதி பாலத்தில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story