மாநில தரவரிசை பட்டியலில் 6-வது இடம் பிடித்த கரூர் மாணவர்
தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 6-வது இடம் பிடித்த கரூர் மாணவர் ராஜேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக விருப்பம் என தெரிவித்தார்.
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல்
தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கலந்தாய்வை மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 4-ந் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதில் 102 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா முதல் இடமும், தர்மபுரியை சேர்ந்த ஹரிணி 2-வது இடமும், கரூரை சேர்ந்த ராஜேஷ் 6-ம் இடமும் பிடித்துள்ளனர்.
கரூர் மாணவர்
கரூர் புன்னம் அருகே உள்ள சடையம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ். புன்னம்சத்திரத்தில் உள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருடைய தந்தை அண்ணாதுரை. இவர் டெக்ஸ்டைலில் பணியாற்றி வருகிறார். தாய் மீனாட்சி.
இது குறித்து மாணவர் ராஜேஷ் கூறுகையில், தரவரிசை பட்டியலில் 6-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தார்கள். தினமும் வீட்டில் 5 மணி நேரம் படிப்பேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, சாப்ட்வேர் என்ஜினீயராக வேண்டும் என்பதே விருப்பம், என்றார்.