கரூர் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை மீண்டும் இயங்குமா?
கரூர் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை மீண்டும் இயங்குமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தகவல் பலகை அகற்றம்
கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளுக்காக அமைக்கப்பட்ட டிஜிட்டல் தகவல் பலகை இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு ரெயில் சேவை முதலில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக பயணிகள் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டன.
இந்தநிலையில் பல மாதங்களாக இயக்கப்படாமல் வைத்திருந்த டிஜிட்டல் தகவல் பலகை பழுதடைந்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் தகவல் பலகை அகற்றப்பட்டது. ஆனால் அது பழுது நீக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படவில்லை. தற்சமயம் கரூர் வழியாக தினந்தோறும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகின்றன. மேற்படி டிஜிட்டல் தகவல் பலகை இல்லாததால் ரெயில்கள் வருகை குறித்த நேரம், ரெயில்கள் புறப்படும் நேரம், ரெயில் பெட்டிகளின் விவரம் குறித்து பயணிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கோச் பொசிஷன் பலகை
மேலும் கரூர் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக கோச் பொசிஷன் தகவல் பலகையும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தகவல் பலகையும் செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் ரெயிலில் முன்பதிவு செய்து விட்டு வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டிகளின் நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
எதிர்பார்ப்பு
இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் அகற்றப்பட்ட மேற்படி டிஜிட்டல் தகவல் பலகை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என்றும், அதே சமயத்தில் பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள செயல்படாத கோச் பொசிஷன் தகவல் பலகையும் சரிசெய்யப்பட்டு இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இது சம்பந்தமாக ரெயில்வே துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பி்க்கையில் பொதுமக்களும், பயணிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.