கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல்
கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய திண்டுக்கல் சாலை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியில் பழைய திண்டுக்கல் சாலை உள்ளது. ஜவகர்பஜார் பகுதியில் இருந்து மக்கள் பாதை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழைய திண்டுக்கல் சாலை வழியாக செல்கின்றன.இதேபோல் லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் நகருக்குள் வரும் வாகனங்களும் பழைய திண்டுக்கல் சாலை வழியாகத்தான் தினமும் சென்று வருகின்றன. பழைய திண்டுக்கல் சாலையின் இருபக்கங்களிலும் டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர், அரசு அருங்காட்சியகம் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல்
இதன் காரணமாக பழைய திண்டுக்கல் சாலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால் இந்த சாலைக்கு வரும் கனரக வாகனங்கள், நீண்ட நேரம் அந்த சாலையில் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பழைய திண்டுக்கல் சாலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே பழைய திண்டுக்கல் சாலையில் கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதை கண்காணித்து போக்குவரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.