கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். வைகாசி திருவிழா
வைகாசி திருவிழா
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் பக்தர்களும் புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7.05 மணியளவில் பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி... என கோஷமிட்டபடியே தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் வலம்
வீதிகளில் தேர் வலம் வருவதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக நீர் தெளித்து கோலமிட்டு வரவேற்றனர். மேலும் தாம்பூலக் கூடையில் வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். கோவில் அருகே இருந்து புறப்பட்ட தேர், வாங்கல் சாலை, ஆலமரத்தெரு, ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், வெங்கமேடு, சுங்ககேட் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் முதல் நாளை (புதன்கிழமை) வரை பக்தர்கள் விரதம் இருந்து வந்து மாவிளக்கு, பால் குடம் எடுத்து வந்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி வழிபாடு நடத்துவது வழக்கம்.
அலகு குத்தி நேர்த்திக்கடன்
அந்தவகையில் ஏராளமான பக்தர்கள் நேற்று பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இருந்து புனிதநீராடி பால்குடம் எடுத்தும், அலகு குத்தி கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும், மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்தி கடனை அம்மனுக்கு பயபக்தியுடன் செலுத்தினர்.
இதேபோல குழந்தை வரம் வேண்டி ஏற்கனவே வழிபாடு நடத்தியவர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை தூக்கி கொண்டு வந்து வழிபாடு செய்தனர். மேலும் உடலில் உள்ள தீராத நோய்களை குணப்படுத்த வேண்டி உடல் முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளிகளை குத்தி கொண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியதை காண முடிந்தது.
அன்னதானம்
தேரோட்டத்தையொட்டி ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நீர்மோர், கம்மங்கூழ், பானகம் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றும் (செவ்வாய்க்கிழமை) மாவிளக்கு, பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்தும் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது.