கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்


கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்
x

கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கரூர்

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும், தாகம் தீர்க்கும் வகையிலும் நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு தலைமை தாங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கினார்.

தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் கரூர் கணேசன், எஸ்.பி.கனகராஜ், சுப்பிரமணியன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலையில் கரூர் கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், சென்னையை போன்று கரூர் மாநகராட்சியில் அனைத்து மின்கம்பிகளையும் புதைவட கம்பிகளாக மாற்ற ரூ.359 கோடியில், 465 கிலோ மீட்டருக்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். விரைவில் அந்த பணிகள் தொடங்க உள்ளது, என்றார்.

முன்னதாக கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியே 55 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி உள்பட 55 பல்வேறு புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார். மேற்கண்ட திட்டப்பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூரை பொறுத்தவரை சிப்காட் அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரவக்குறிச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யும் பணியும், முருங்கை பூங்காவிற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடக்கிறது. 60 நாட்களுக்குள் இதற்கான இடங்கள் ஒப்படைப்பதற்கான பணிகள் முடிந்து, அந்த இடங்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு அதற்கான கட்டிட பணிகள் தொடங்க இருக்கின்றன.நடந்து கொண்டிருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கரூர் மாவட்டத்திற்கு துணைமின் நிலையங்களை முதல்-அமைச்சர் கொடுத்துள்ளார். அதற்கான இடங்கள் கலெக்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டு துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும், என்றார்.


Next Story