மெரினாவில் கருணாநிதி நினைவிடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்


மெரினாவில் கருணாநிதி நினைவிடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
x

கருணாநிதியின் புத்தகங்கள் அடங்கிய புத்தக விற்பனை நிலையம் நினைவிடத்தில் அமைந்துள்ளது.

சென்னை,

'கலைஞர் உலகம்' எனும் பெயரில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துடன் கூடிய கருணாநிதியின் புதிய நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த பேரறிஞர் அண்ணா 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி மறைந்தபின் அவருக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் எதிரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதனை அமைத்தவர் கருணாநிதி.

தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக வீற்றிருந்து, தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி; இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி, உலக வரலாற்றில் உன்னத புகழ் சின்னமாக திகழும் கருணாநிதி தனது 95-ம் வயதில் 2018 ஆகஸ்டு 7-ந் தேதி மறைந்து, கோர்ட்டு ஆணை பெற்று பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் அருகிலேயே இடம் கொண்டார்.

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் 2 நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுற பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பேரறிஞர் அண்ணாவின் சிலை; வலப்புறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்துள்ளன.

பேரறிஞர் அண்ணா துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றால் அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதும் வடிவிலான சிலையை காணலாம். சிலையை கடந்து சென்றால் எதிரே அமைந்துள்ள கருணாநிதி சதுக்கத்தில், "ஓய்வெடுத்துக்கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்" எனும் தொடர் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சதுக்கத்தின் கீழே நிலவறை பகுதியில், 'கலைஞர் உலகம்' எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் உள்ளே, கருணாநிதி நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டு உள்ளது,

அது அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என கருணாநிதி 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

அங்கே கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கும் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 புத்தகங்களின் பெயர்கள் காணப்படும். அவற்றின் மீதும் நாம் கை வைத்தால் அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும்.

மேலும் சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் படக்காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் வைக்கப்பட்டு உள்ளன. கலைஞர் உலகத்திற்கு வெளிப்பகுதியில் 5 தொலைக்காட்சிகளில் கருணாநிதி ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கருணாநிதி அந்தரத்தில் மிதக்கும் காட்சி நம்மை அற்புத உலகிற்கு அழைத்துச் செல்லும். கருணாநிதியின் புத்தகங்கள் அடங்கிய புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புகள் அமைந்த தமிழ் சமுதாயத்தின் தன்னிகரில்லாப் பெருமைகளைத் தரணியில் உயர்த்தி, நிலைநாட்டிய ஒப்பிலாத் தலைவர்களான பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் 26-ந் தேதி (நாளை) மாலை 7 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story