கனியாமூர் கலவரம்: கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை
கனியாமூர் கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சியில் சைபர் கிரைம் போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
இதில் பங்கேற்க கலவரக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக திரட்டப்பட்டு வந்ததாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.
10 பேர் கொண்ட குழுவினர்
இந்தநிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் விதமாக, சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.சண்முகப்பிரியா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் அலுவலகத்தில் முகாமிட்டு தீவிர, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் ஸ்ரீமதி மரணம் மற்றும் போராட்டம் தொடர்பாக வெளியான பதிவுகள் குறித்து கண்காணித்து அவர்கள் பற்றிய விவரங்களை திரட்டி வருகிறார்கள்.
13 பேர் கைது
ஏற்கனவே கரூர், பெரம்பலூர், வேலூர், திண்டுக்கல் பகுதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஸ்ரீமதி மரணம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.