மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம்  முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா    கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர்

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பாலதண்டாயுதபாணி வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு அபிஷேக ஆராதனை, 11 மணிக்கு வீரபாகு தேவர்கள் நகர்வலம் வருதல், மாலை 4 மணிக்கு சூரபத்மன் நகர்வலம் வருதல், மாலை 6 மணிக்கு மரகதாம்பிகை உடனுறை மாத்புரீஸ்வரர் கோவிலில் முருகன் சக்திவேல் பெறும் வைபவ நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரமும், இரவு 8 மணிக்கு சுவாமி மயில்வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

முத்துக்குமாரசுவாமி

பரங்கிப்பேட்டை பெரிய கடை தெருவில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சூரனை முருகப்பெருமான் வதம் செய்வார். பின்னர் கோபத்துடன் இருக்கும் முருகப்பெருமானுக்கு பரிகார பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

சிவசுப்பிரமணிய சுவாமி

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை மற்றும் மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) முருகன் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி மகா அபிஷேகம் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் கம்பம் ஏறுதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணியளவில் சாமி வீதிஉலா மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதையடுத்து 31-ந் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியும், 1-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story