கல்வராயன் மலையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு சப்ளையாகும் சாராயம்போலீசுக்கு சவால் விடும் வியாபாரிகளுக்கு கடிவாளம் போடுவது எப்போது?


கல்வராயன் மலையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு சப்ளையாகும் சாராயம்போலீசுக்கு சவால் விடும் வியாபாரிகளுக்கு கடிவாளம் போடுவது எப்போது?
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 15 March 2023 6:47 PM GMT)

கல்வராயன் மலையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு சாராயம்சப்ளையாகிறது.

கள்ளக்குறிச்சி



கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி கல்வராயன் மலை. கண்களுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பச்சைபசேல் என காட்சியளிக்கும் வான்உயர்ந்த மரங்கள், மனதை குளிர்விக்கும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள், சல சல வென்று ஓடும் நீரோடைகள் என்று இயற்கையின் கொடையாக இருக்கிறது இந்த கல்வராயன் மலை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிராதான சுற்றுலா மையமாக இம்மலை உள்ளது. அதோடு இங்கு எண்ணற்ற சின்னஞ்சிறு கிராமங்களும் நிறைந்து காணப்படுகிறது.

4 மாவட்டங்களுக்கு சப்ளை

இயற்கை அன்னை அள்ளிக்கொடுத்த இந்த மலையானது, இன்று சாராய வியாபாரிகளின் சொர்க்க பூமியாக மாறி இருக்கிறது. ஏனெனில் கல்வராயன் மலையானது, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட எல்லைகளை தொடும் வகையில் அமைந்திருக்கிறது. இது சாராய வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை விஷ்தரிப்பு செய்வதற்கு ஏதாவாக அமைந்து விடுகிறது. இங்கு தயார் செய்யப்படும் சாராயத்தில் கடுக்கா உள்ளிட்டவை பயன்படுத்துவதால், இதன் ரூசி தனித்துவமாக இருப்பதாக கூறி இந்த சாராயத்தை குடிப்பதற்கென்று தனியே மது பிரியர்களே இருக்கிறார்கள். இதனால் தான் மேற்கூறிய 4 மாவட்டங்களுக்கும் இங்கிருந்து சப்ளையாகும் சாராயத்துக்கு வரவேற்பு இருக்கிறது.

சாராயம் விற்பனைக்கு ஏலம்

ஆனால், இந்த சாராயத்தால் 4 மாவட்டத்தை சேர்ந்த எண்ணற்ற குடும்பங்கள் தினந்தோறும் இன்னலுக்கு உள்ளாகி வருவது தான் வேதனைக்குறிய ஒன்றாகும். சாராய விற்பனையை தடுப்பது என்பது போலீசுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

சாராய விற்பனையை பொறுத்தவரை மலையில் உள்ள சில கிராமங்களில் குத்தகைக்கு விடும் பழக்கமும் இருந்து வருகிறது. அதாவது, ஊரில் உள்ள கோவிலுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரைக்கும் தருவதாக கூறி, ஏலம் எடுத்து கொள்வார்கள். அவ்வாறு ஏலம் எடுப்பவர்கள் குறைந்தது 4 மாதம் வரைக்கும் விற்பனை செய்யலாம் என்று காலமும் நிர்ணயம் செய்யப்படும். ஏலம் எடுத்தவர்களை தவிர்த்து, வேறு யாரும் சாராய விற்பனையில் ஈடுபட்டால், அவர்களை போலீஸ் வசம் சிக்க வைத்துவிடுவார்கள். போலீசாரும், சாராய வேட்டையில் ஈடுபட்டு, சிலரை கைது செய்து விட்டோம் என்று கூறி வந்துவிடுவார்கள். ஆனால், அங்கு அத்துடன் சாராய விற்பனை ஓய்ந்து விடாது. மலையில் உள்ள நீரோடை பகுதிகளில் சாராய ஊறல்கள் போட்டு, லாரி டியூப்கள், பாக்கெட் என்று பல வடிவங்களில் சாராயத்தை கடத்தி சென்று, கள்ளக்குறிச்சி உள்பட 4 மாவட்ட பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சாதுரியமாக செயல்படுகிறார்கள்

இதில் சில வியாபாரிகள், மலையில் எந்த மாவட்ட போலீசாரின் எல்லை எதுவரைக்கும் என்று அறிந்து கொண்டு, சரியாக அந்த பகுதியில் சாராய ஊறல் அமைத்துகொள்கிறார்கள்.

இதனால், இருமாவட்ட போலீசாரும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி, அந்த பகுதிக்கே செல்வது இல்லை. இதை வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, வியாபாரத்தையும் விரிவுபடுத்தி அதன் மூலம் பல குடும்பங்களை வீதிக்கு வர செய்யும் வேலையையும் கச்சிதமாக பார்த்து வருகிறார்கள்.

மதுவிலக்கு போலீஸ்

அதே நேரத்தில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு போலீஸ் நிலையம் என்பது மலைப்பகுதியில் இல்லை. அவ்வப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து தான் போலீசார் வருகிறார்கள். மேலும் துரூர், மாயம்பாடி, மூலக்காடு ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சோதனைச்சாவடி போலீசுக்கு போக்கு காட்டிவிட்டு, சாராயத்தை கடத்தி சென்று விற்பனை செய்து விடுகிறார்கள்.

சாராயம் விற்பனையை தடுக்க, கல்வராயன்மலை பகுதியில் தற்காலிகமாக கலால் போலீஸ் நிலையம் அமைத்து, ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் சாராய விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

மேம்படுத்த வேண்டும்

பசுமையும், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை அன்னையின் படைப்பால் கண்களை குளிர்விக்கும் கல்வராயன்மலை, இன்று அங்கு உற்பத்தி செய்யப்படும் சாராயத்தால் பலரது வாழ்வை சீரழித்து கொண்டு வருகிறது. இதற்கு கடிவாளம் போடுவது அவசியமானதாகும்.

அதேநேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வருவாயை பெருக்கும் விதமாக, மலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வசதிகளை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story