கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமேசுவரம்,
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 2 நாட்கள் இந்த ஆலய திருவிழா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 4 மணிக்கு கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குத்தந்தை ஏற்றி வைக்கின்றார். தொடர்ந்து சிலுவை பாதை, திருப்பலி நடைபெறுகிறது. இரவில் தேர் பவனி நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 75 விசைப்படகுகளிலும், 24 நாட்டுப்படகுகளிலும் செல்ல மொத்தம் 3 ஆயிரத்து 265 பேர் ராமேசுவரத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.