காணும் பொங்கலையொட்டி மெரினா காமராஜர் சாலையில் 17-ந்தேதி போக்குவரத்து மாற்றம்


காணும் பொங்கலையொட்டி மெரினா காமராஜர் சாலையில் 17-ந்தேதி போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 14 Jan 2024 4:45 AM IST (Updated: 14 Jan 2024 4:45 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

வருகிற 17-ந்தேதி காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மெரினா காமராஜர் சாலையில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது. மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் அதிகரிக்கும் போது, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்.

அதேபோல பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி போர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம் பறக்கும் மின்சார நிலையம், லேடி வில்லிங்டன் பள்ளி, ராணி மேரி மகளிர் கல்லூரி, சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம், பி.டபிள்யூ.டி. மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்), செயிண்ட் பீட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈ.வி.ஆர். சாலை, மருத்துவ கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்), தலைமைச்செயலகம் உள்ளே (காவல்துறை வானங்கள்).

மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story