தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி.யான ஜோதிமணி போட்டியிடுகிறார்
கரூர்,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அந்தவகையில் கரூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது திறந்த வேனில் நின்று அப்பகுதி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், 4 ஆண்டுகள் 9 மாதம் 24 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்துள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.
பல நேரத்தில் நம்முடைய ஊருக்கு இரவில்தான் வந்துள்ளேன். அந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கிறது. அம்மா இருந்திருந்தால் பணிச்சுமை தெரிந்திருக்காது என பேசிய போது கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அழுது கொண்டே பேசிய ஜோதிமணி, நீங்கள் தான் எனக்கு குடும்பம் போல் இருந்தீர்கள். அதனால் எல்லாருக்கும் நன்றி எனக்கூறி பிரசாரத்தை தொடராமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு கண்ணீருடன் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஜோதிமணிக்கு ஆறுதல் கூறினர்.