ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
x
தினத்தந்தி 23 May 2024 10:22 AM IST (Updated: 23 May 2024 11:53 AM IST)
t-max-icont-min-icon

ஜெயக்குமார் தனசிங் எப்படி இறந்தார் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியாததால் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் சாவதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகின.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்த நபர்கள், கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜெயக்குமார் தனசிங் எப்படி இறந்தார் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியாததால் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். மேலும் சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 11 தனிப்படைகள் நடத்திய விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 36 நபர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


Next Story