மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
பூக்கள் விலை உயர்வு
நவராத்திரி விழாவில் முக்கிய நாளான ஆயுத பூஜை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகள், அலுவலகங்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இதையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வழிபாட்டிற்கு முக்கியமான பூஜை பொருட்களில் ஒன்றானது பூக்களாகும். இந்த நிலையில் ஆயுத பூஜையையொட்டி புதுக்கோட்டையில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது. கடந்த வாரங்களில் ரூ.350 முதல் ரூ.500 வரைக்கும் விற்றது. இந்த நிலையில் நேற்று இரு மடங்காக அதிகரித்தது.
கடை வீதியில் மக்கள் கூட்டம்
இதேபோல பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களில் முல்லை பூ கிலோ ரூ.750-க்கும், சாதி பூ ரூ.700-க்கும், செவ்வந்தி பூ ரூ.200 முதல் ரூ.250-க்கும், செண்டி பூ ரூ.70 -க்கும், அரளி பூ ரூ.500-க்கும். ரோஸ் ரூ.250-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.40-க்கும் விற்றது. மொத்தமாக வியாபாரிகள் வாங்கி சென்று சில்லறை விலைக்கு பூக்களை விற்பனை செய்த போது இதன் விலை சற்று அதிகரித்திருந்தது. விலை உயர்ந்திருந்தாலும் அத்தியாவசிய தேவை என்பதால் பொதுமக்களும் பூக்களை வாங்கி சென்றனர். ஒரு சில அரசு அலுவலகங்களில் நேற்று ஆயுத பூஜையை ஊழியர்கள் கொண்டாடினர். பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் புதுக்கோட்டை கடைவீதிகளில் நேற்று அதிகமாக காணப்பட்டது. நாளை பண்டிகையையொட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.