ஆன்மீகத்தில் பெண்கள் வளர்வதற்கான நேரம் இது: சத்குரு ஜக்கி வாசுதேவ்


ஆன்மீகத்தில் பெண்கள் வளர்வதற்கான நேரம் இது: சத்குரு ஜக்கி வாசுதேவ்
x

ஆன்மீகத்தில் பெண்கள் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

சென்னை,

ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதியை சத்குரு அவர்களின் ஞானதோய தினமாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கொண்டாட்டம் அமெரிக்காவில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடத்தப்பட்டது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நேரலையில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- ஞானோதயம் என்றால் தலையில் கொம்பு, முதுகில் சிறகு என கண்ணுக்கு தெரியும் மாற்றங்களோடு இருப்பதல்ல. இது உயிரின் செயல்முறையை புரிந்து கொள்வது. தலைமுறைகளின் நீட்சியாக மட்டுமே இல்லாமல், தனித்துவம் மிக்க தனிமனிதராக நீங்கள் உயர வேண்டும். தனிமனிதராக இருப்பது என்றால் அனைத்திலும் உங்களை காணும் தன்மையோடு இருக்க வேண்டும்.

நான் வேறு மற்றவை வேறு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துமே நாம் தான் என்கிற தன்மையோடு இருக்க வேண்டும். மேலும் ஞானமடைதல் என்பது நீங்கள் எந்தளவு தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதை பொருத்தது. தேவையான தீவிரத்தோடு நீங்கள் இருந்தால். இது உங்களுக்கு நிகழும். பல தலைமுறைகள் முன்பு உலகில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களாக இருந்தார்கள்.

அதேபோல் இது பெண்கள் ஆன்மீகத்தில் வளர்வதற்கான நேரம். பெண்கள் ஆண்களோடு போட்டி போடுகிறோம் என்கின்றனர். குறிப்பாக உடல் வலிமை சார்ந்த போட்டிகளாக அவை இருக்கின்றது. உடலளவில் ஆண் தன்மை வேறு பெண் தன்மை வேறு. ஆனால் ஆன்மீகத்தில் அப்படியொரு பாகுபாடு இல்லை. எனவே இது தான் பெண்கள் போட்டியிடவும், வளரவும் அவர்களின் முழுமையான திறனை வெளிப்படுத்தவும் ஏற்ற இடம்.

தற்போது ஆன்மீகத்தில் பெண்கள் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில், ஆன்மீக விழிப்புணர்வோடு வளரும் முதல் தலைமுறை பெண்கள் என்கிற பெருமையையும் அதற்கான அங்கீகாரத்தையும் பெறுவார்கள். கான்சியஸ் ப்ளானட் எனும் அமைப்பின் ஓர் அங்கமாக அமெரிக்காவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நகரம் ஒன்று உருவாகி வருகிறது. இந்நகரம் அடுத்த 30-40 ஆண்டுகளில் உலகின் மிக முக்கியமான இடமாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story