திருத்தணியில் 3 பேர் உயிரிழந்த கல்குவாரி குட்டையை சுற்றி தடுப்பு வேலி அமைக்க முடிவு


திருத்தணியில் 3 பேர் உயிரிழந்த கல்குவாரி குட்டையை சுற்றி தடுப்பு வேலி அமைக்க முடிவு
x

திருத்தணியில் 3 பேர் உயிரிழந்த கல்குவாரி குட்டையை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதியில் உள்ள உறவினர் துக்க அனுசரிப்பு நிகழ்வில் பங்கேற்க வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா (வயது 65), ஹேமலதா (16) மற்றும் கோமதி (13) ஆகியோர் கடந்த 9-ந் தேதி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி நேற்று முன்தினம் துணை கலெக்டர் (பயிற்சி) சுப்புலட்சுமி, திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் ஆகியோர் 3 பேர் உயிரிழந்த பெரியார்நகர் கல்குவாரி குட்டையை நேரில் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் உள்ள 3 கல்குவாரிகளை சுற்றி தடுப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி வருவாய் ஆய்வாளர் கமல், சர்வேயர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் ஆகியோர் கல்குவாரி பகுதிகளை சுற்றி நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். நிலஅளவீடு குறித்து விரிவான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் கல்குவாரியை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story