காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை


காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை
x

காலை உணவு திட்டம் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றிருந்தது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சேலம்,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் அவரது உருவப் படத்திற்கு தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை மாநில அரசு கொண்டு வர வேண்டும். காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம் இடம்பெற்றிருந்தது. காலை உணவு திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு.

நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுக்கு மாற்று கருத்து இல்லை. இந்தாண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் நடந்த தவறுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. தேர்வு குளறுபடிகளை ஆய்வு செய்து, மத்திய அரசு சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வை வைத்து தி.மு.க. தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது.

எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள்? நீட் தேர்வு வந்தபிறகு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்பது குறித்த தரவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story