வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழகமும் இருப்பது பாராட்டுக்குரியது -வெங்கையா நாயுடு


வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழகமும் இருப்பது பாராட்டுக்குரியது -வெங்கையா நாயுடு
x

வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருப்பதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசை பாராட்டுவதாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

சென்னை,

ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கத்தின் 60-வது ஆண்டு விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் தினேஷ் மேத்தா வரவேற்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி அறிவு

எந்த நாட்டில் இருந்தாலும், எந்த மாநிலத்தில் இருந்தாலும் பிள்ளைகள் பெற்றோரை மறந்து விடக்கூடாது. வெளிநாட்டில் இருந்துகொண்டு 'வீடியோகால்' மூலம் பெற்றோரிடம் பேசி விட்டு அவர்களை நேரில் பார்ப்பதற்கு கூட பலர் வருவது இல்லை. இது வேதனைக்குரியது. இந்த கலாசாரத்தை ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கக்கூடாது. அதற்காக மட்டுமே நாம் கல்வி அறிவு பெறவில்லை.

முதியோர்களை, பெற்றோர்களை மதிக்கவும், பாதுகாக்கவும்தான் நமக்கு கல்வி அறிவு துணையாக இருக்க வேண்டும். நமக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மதிக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும்.

தாய்மொழியில் பேச வேண்டும்

முதலில் அனைவரும் தாய்மொழியில் பேச வேண்டும். அதன் பின்பு எந்த நாட்டில், மாநிலத்தில் இருக்கிறோமோ அந்த நாட்டின், மாநிலத்தின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ அந்த மாநிலத்தின் கலாசாரத்தை நாம் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இதற்காக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். ஒரு நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதில் கல்வியின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.

அந்த வகையில் ஏழைகளின் கல்விக்காக இந்த சங்கம் செய்து வரும் சேவை பாராட்டுக்குரியது. ஏழைகளுக்கு சேவை செய்வது என்பது கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகராகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிவில் சங்க நிர்வாகிகள் வெங்கையா நாயுடுவுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க செயலாளர் ஆஷிஸ் ஜெயின் நன்றி கூறினார்.

1 More update

Next Story