சென்னை ராயப்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி. பெண் ஊழியர் பலி - அண்ணன் கண் எதிேர பரிதாபம்


சென்னை ராயப்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி. பெண் ஊழியர் பலி - அண்ணன் கண் எதிேர பரிதாபம்
x

சென்னை ராயப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. பெண் ஊழியர், அண்ணன் கண் எதிரேயே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

சென்னை

சென்னை ஆயிரம்விளக்கு அஜிஸ் முல்லக் தெருவைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 22). இவர், கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பிரியங்கா, தன்னுடைய அண்ணன் ரிஷிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

பின்னர் இருவரும் ஜூஸ் குடிப்பதற்காக ஜாம்பஜார் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். ராயப்பேட்டை மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற மாநகர பஸ்சை முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ரிஷிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த பிரியங்கா, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது மாநகர பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.

தனது கண் எதிரேயே பஸ் சக்கரத்தில் சிக்கி தங்கை பிரியங்கா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருப்பதை கண்டு ரிஷிநாதன் அலறினார். பின்னர் பிரியங்காவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தில் பிரியங்காவின் அண்ணன் ரிஷிநாதன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய பேத்தியும் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story