ஆவின் பால் சப்ளை சீராக இருக்கிறதா? பொதுமக்கள் கருத்து
உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
'தமிழ்நாடு பால்வள மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்' என்ற பெயரில் 1958-ம் ஆண்டு நிறுவப்பட்ட பால் விற்பனை செய்யும் இந்த நிறுவனம் தொடர்ந்து கடந்த 65 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. இது 'ஆவின்' என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகம் மட்டும் அல்லாது நாட்டை கடந்து உலக முழுவதும் சேவை செய்யும் அளவிற்கு விரிவடைந்து உள்ளது. குறிப்பாக, பால், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம், நெய், மில்க் ஷேக், கோவா, டீ, காபி, சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.
சென்னை மாநகரைப் பொறுத்த வரையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூரில் உள்ள பால்பண்ணைகள் மூலம் பால் வினியோகம் செய்யப்படுகிறது. நீல நிறம், இளஞ்சிவப்பு நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம் என்று 4 வகையான பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இவை முறையாக பொதுமக்களுக்கு தேவையான அளவு, தேவைப்படும் நேரத்தில் கிடைக்கிறதா? என்பது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
தரமும், அளவும் குறைவு
இதுகுறித்து பள்ளிக்கரணை சேர்ந்த லட்சுமி சந்தானம் கூறும் போது, 'பால் விலை அதிகரித்தாலும் பாலின் தரம் நன்றாக இல்லை. குறிப்பாக ஆரஞ்சு நிற பாக்கெட் தான் வாங்கி பயன்படுத்தி வந்தோம். விலை ஏற்றத்திற்கு பிறகு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் முறையாக கிடைப்பதே இல்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவை தரமும், அளவும் குறைவாகவே இருக்கிறது. இதுகுறித்து கேட்டால் எந்திரம் பழுதானதால் அளவு குறைந்து விட்டதாக காரணம் கூறுகின்றனர். பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகள் ஓரளவு கிடைத்தாலும் அவற்றில் பாலுக்கு நிகராக தண்ணீர் அதிகமாக இருப்பதால் அவற்றை வாங்கி காபி போட்டு குடிக்க முடியாத நிலை இருக்கிறது. உரிய நேரத்தில் கிடைக்காமல் காலதாமதமாகவேகத்தான் கிடைக்கிறது. இதனால் காலையில் பால் வாங்குவதற்கு ஒரு பெரிய பேராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. சென்னை மாநகரில் உள்ள பால்பண்ணைகளுக்கு காலதாமதமாக பால் வருவதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தரமான பால் கிடைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தட்டுப்பாடு
இதுகுறித்து அமைந்தகரையை சேர்ந்த கிரிஜா பார்த்திபன் கூறும் போது, 'ஆவின் பால் பாக்கெட்டை வீட்டிற்கு கொண்டு வந்து தருகிறார்கள். கொழுப்பு சத்து உள்ள பால் நீல நிற பாக்கெட்டில் குறைவாக இருப்பதால், வீட்டில் வயதானவர்கள் இருப்பதால் இதனை வாங்கத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் அவை தேவைக்கு 2 பாக்கெட் வழங்குவதில்லை. அதேபோல் நீல நிற பால் பாக்கெட்டில் தண்ணீர் தான் அதிகம் இருக்கிறது. அவை சுவையாக இல்லை. ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் விலை அதிகம் என்றாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை. தட்டுப்பாடு இல்லாமல் பால் பாக்கெட் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக்காலத்தில் பால் விரைவில் கெட்டு போய்விடும் என்பதால் அதிகாலையிலேயே பால் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
விலை உயர்வு
அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பி.சுகிதா குமாரி கூறும்போது; 'ஆவின் பால் என்றால் தரமாகவும், நியாயமான விலையிலும் எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வாங்கிக்கொடுத்து வந்தோம். ஆனால் இப்போது ஆவின் பால் முறையாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சரியான நேரத்தில், தேவையான அளவு கிடைப்பதில்லை. விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பால் விலை ஏற்றத்தால் பால் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து இனிப்புகளுக்கும் விலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
ஆவின் நிறுவனத்தை அரசு நடத்துவதால் பொதுமக்கள் நலன் கருதி விலைகளை குறைக்க வேண்டும். விலைகளை ஆவின் நிறுவனமே உயர்த்தும்போது, அதனை பார்த்து தனியார் பால் நிறுவனங்களும் விலைகளை உயர்த்துகின்றன. இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே விலைகளை குறைத்து தரமான வகையில் பால் வினியோகம் செய்ய வேண்டும்' என்றார்.
ரெயில் நிலையங்களில் ஆவின்
தாம்பரத்தை சேர்ந்த ராமாமிர்தம் கூறும் போது, 'ஆவின் பால் முன்பு போல் இல்லை. விலை ஏற்றம் ஒரு புறம் இருந்தாலும், அளவும், தரமும் மிக குறைவாக இருக்கிறது. பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் ஆவின் பாலின் தரத்தை உயர்த்த வேண்டும். அதேபோல், வெளியூர்களில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகள், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இருந்த ஆவின் பூத்களில் விற்பனை செய்யப்படும் சூடான பாலை வாங்கிப்பருகி தங்களின் பயண களைப்பை போக்கி கொள்வார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ரெயில் நிலையத்தில் உள்ள ஆவின் பால் பூத்கள் மூடப்பட்டு, அந்த இடத்தில் தனியார் கேண்டீன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அதிக விலை கொடுத்து, தரம் இல்லாத காபி, டீயை ஒரு சில கேண்டீன்களில் வாங்கி சாப்பிட வேண்டிய அவல நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தரத்தின் அடிப்படையில் ஆவின் பூத்துக்கு வழங்கும் வரவேற்பை தனியார் கேண்டீன்களுக்கு வழங்குவதில்லை. சேவை அடிப்படையில் மீண்டும் ரெயில் நிலையங்கள் அனைத்திலும் ஆவின் பால் பூத்களை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ஊட்டச்சத்து
புதூர் தமிழ் ஆசிரியை ஜாய் ஜெயபால் கூறும்போது, 'ஆவின் நிறுவனம் முன்பெல்லாம் ஒரே வகையான பாக்கெட்டில் பாலை விற்பனை செய்து வந்தது. இப்போது நாகரிக மோகத்தில் கலர், கலரான பாக்கெட்டுகளில் பாலின் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்கிறது. இதில் நீல நிற பாக்கெட்டில் விற்பனை செய்யும் பாலின் தரம் மிக மோசமாக இருக்கிறது. இதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. அனைத்து வயதினருக்கும் பால் ஊட்டசத்து மிகுந்த பானமாக இருந்து வருகிறது. டீ குடித்து கொண்டே வாழ்க்கையை பலர் ஓட்டி வரும் இந்த வேளையில் பால் விலையை அதிகரிப்பது சரியானது அல்ல. ஆவின் நிறுவனம் தரமான பாலை ஒரே பாக்கெட்டில் அடைத்து நியாயமான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்' என்றார்.
பொதுமக்கள் அதிருப்தி
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாக குழு உறுப்பினர் தனசேகர் கூறும்போது, 'சென்னையில் தினசரி 13 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.3 விலை குறைப்புக்கு பிறகு தினசரி விற்பனை 14.5 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மாநகரில் பல்வேறு வழித்தடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. விலை குறைவு காரணமாக ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி ஆரஞ்சு நிற பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. ஆனால் கார்டுதாரர்களுக்கு விலை ஏற்றம் இல்லை. இதனால் பச்சை நிற பால் விற்பனை அதிகரித்தது. ஆனால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தை காரணமாக கூறி பச்சை நிற பால் ரேஷன் முறையில் சப்ளை செய்கிறது. இதில் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து மொத்த பால் விற்பனையாளர்கள் மூலம் சாதாரண, ஏழை எளிய மக்களுக்கு சுமார் தினசரி 2 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. இவை காலதாமதமாக சப்ளை செய்யப்படுவதால், பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்குகிறது. எனவே, சரியான நேரத்தில் பால் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கூடுதல் விலைக்கு கொள்முதல்
ஆவின் அதிகாரிகள் கூறும்போது, 'நகர்புறங்களில் அதிக மக்கள் ஆவின் பாலை பயன்படுத்துகின்றனர். 2022 - 2023-ம் ஆண்டில் தினசரி ஆவின் பால் விற்பனை 30 லட்சம் லிட்டராக அதிகரித்து உள்ளது. இதன்படி 2021 - 2022-ம் ஆண்டில் தினசரி ஆவின் பால் விற்பனை 26.41 லட்சம் லிட்டராக இருந்தது. இதன்படி கடந்த ஆண்டில் ஆவின் பால் விற்பனை 3.60 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.
இதுபோன்று விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது. 2022-2023-ம் ஆண்டில் விற்பனை மூலம் ரூ.7 ஆயிரத்து 898 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2021 - 2022-ம் நிதி ஆண்டில் விற்பனை மூலம் ரூ.7 ஆயிரத்து 595 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி விற்பனை வருவாய் ரூ.303 கோடி அதிகரித்துள்ளது.
இருந்தாலும் தற்போது பால் தட்டுப்பாடுக்கு காரணம், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் பால் உற்பத்தி குறைவது வழக்கம். ஆனால் நம் நாட்டில் பல மாநிலங்களில் அரியவகை நோய் பரவியதால் மாடுகளில் பால் சுரப்பு மிகவும் குறைந்துவிட்டது. தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாலை லிட்டருக்கு ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்பட்டாலும் மற்ற மாநிலங்கள் ரூ.45-க்கு தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் சிறிய பிரச்சினை ஏற்பட்டதால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது' என்றனர்.