இடங்களை மாற்றம் செய்ததில் முறைகேடு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
இடங்களை வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி அண்ணாநகரில் பொதுமக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
இடங்களை வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி அண்ணாநகரில் பொதுமக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க உத்தரவு
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி. கோட்டாம்பட்டி அண்ணா நகரில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் வீடுகளை அதிகாரிகள் இடிக்க சென்றபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.இந்த நிலையில் அண்ணா நகர் பொதுமக்கள் நேற்று காலை கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடுகளில் கருப்புக்கொடி
அப்போது, அண்ணாநகர் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பை வெளியேற்ற நினைக்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.அண்ணா நகரில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், குழந்தைகள் படிப்பு பாதிக்காமல் இருக்க குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். இடம் வகை மாற்றுவதில் முறையீடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. பின்னர், இதுதொடர்பாக பல வீடுகளில் கருப்புக் கொடி கட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.