இறையூர் தீண்டாமை விவகாரம்: கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு


இறையூர் தீண்டாமை விவகாரம்: கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
x

சாதி பாகுபாடு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 10-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அங்குள்ள டீக்கடை ஒன்றில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்படுவதாகவும், அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை எனவும் கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கலெக்டர் கவிதா ராமு, அங்குள்ள மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தார். அப்போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடக்கூடாது என்று கூறி சாமியாடிய சிங்கம்மாள் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அதே போல் டீக்கடையில் இரட்டைக் குவளை முறையை பயன்படுத்திய மூக்கையா என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, அந்த கிராமத்தின் தற்போதைய நிலையை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இருவரின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வுக்குழு தனது அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வரும் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.




Next Story