மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு
மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டத்தில் கால்நடை வளர்ப்போர் இணைந்து பயன்பெறலாம். கால்நடை காப்பீடு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும். இதர வகுப்பினர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும். உதாரணமாக ரூ.35 ஆயிரம் மதிப்பில் பசு/எருமைகளுக்கு ஒரு வருடத்திற்கு காப்பீடு செய்திட தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ரூ.152 மற்றும் இதர வகுப்பினருக்கு ரூ.254 மட்டும் செலுத்தினால் மீதமுள்ள தொகையினை அரசு மானியமாக ஏற்று கொள்ளும், அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு, 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடை காப்பீடு செய்ய 800 இலக்கு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2 ½ முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.