கருமந்துறை, ஆத்தூர் பகுதிகளில் சாராய தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்-புதிய போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பேட்டி


கருமந்துறை, ஆத்தூர் பகுதிகளில் சாராய தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்-புதிய போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பேட்டி
x

கருமந்துறை, ஆத்தூர் பகுதிகளில் சாராய தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சிவக்குமார் கூறினார்.

சேலம்

பொறுப்பேற்பு

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபினவ், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகாடமிக்கு சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டார். சென்னை வண்டலூர் போலீஸ் அகாடமி துணை இயக்குனராக பணியாற்றிய சிவக்குமார், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவர் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, ஓமலூரில் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், சேலம் மண்டல மதுவிலக்கு பிரிவு சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிவக்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்ல பாண்டியன், கென்னடி, ராஜ காளீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சாராய தடுப்பு நடவடிக்கை

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி புகார்கள் பெறப்படும். அந்த புகார்கள் மீது தாமதமின்றி உரிய விசாரணை நடத்தி உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினை என்று வரும் அப்பாவி பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பது எனது நோக்கம். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை தடுக்கவும், நடந்த சம்பவங்களை கண்டறியவும் கண்காணிப்பு கேமரா முக்கிய பங்கு வகிப்பதால் அதை முக்கிய இடங்களில் பொருத்தப்படும். கருமந்துறை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். ரவுடிகளை ஒடுக்க குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் இதர சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், குட்கா, சாராயம் போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். மேலும் குற்றப்பின்னணி கொண்ட ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.மேலும் குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் போலீசார் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story