6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?-இளைய சமுதாயத்தினர் கருத்து


6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?-இளைய சமுதாயத்தினர் கருத்து
x

6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா? என்று இளைய சமுதாயத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தை சொல்கின்றன. தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன. உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.

சர்வதேச வேட்டி தினம்

2016-ம் ஆண்டு அந்த அமைப்பு தான் ஜனவரி 6-ந் தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது. அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்! சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே?

அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.

வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பீரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச்சென்று விடுகிறது. எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகள் விவரம் வருமாறு:-

கலாசாரத்தை காக்கும் சின்னம்

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் வக்கீல் இளங்கோ கூறியதாவது:-

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு என்றும் பாரம்பரிய உடைகள் உண்டு, குறிப்பாக தென் பகுதியில் புடவை, வேட்டி நம் அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் உள்ளது. இலை, தழைகளை உடைகளாக அணிந்து தற்போது, கோட், சூட் வரை உடைகள் வளர்ச்சி அடைந்தாலும், நம் வேட்டி, சேலைக்கு என்று ஒரு பெருமை உலகமெங்கும் உண்டு.

அரசியல் பிரமுகர்கள் கூட வேட்டி, சட்டை அணிந்து தான் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலும் உடைகள் பருத்தி, சணல், கம்பளி என்று அமைந்தாலும், பருத்தி வேட்டி, சட்டைகளுக்கு எப்போதும் தனி மகிமை உண்டு. தற்போது இளைஞர்கள், குழந்தைகள் வேட்டி, சட்டை அணிய தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப வேட்டி தயாரிப்பு நிறுவனங்களும், பல்வேறு டிசைன்களில் வெளியிட்டு அவர்களை ஊக்குவித்து வருகின்றன.

சுடிதார், குர்தா, லங்கோட், சோலி, பைஜாமா என்று எத்தனையோ விதமான உடைகள் சமுதாயத்தில் வெளிபட்டாலும், நமது வேட்டி, சேலைகளுக்கு என்று ஒரு மரியாதை உலக அளவில் இருந்து வருகிறது. நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும் காக்கும் சின்னமாக வேட்டி, சட்டை மற்றும் சேலை இருப்பதை மறுக்க முடியாது.

வேட்டி விற்பனை குறைந்து விட்டது

பள்ளிபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி கந்தசாமி:-

பள்ளிபாளையம் பகுதியில் கடந்த காலங்களில் லுங்கியுடன் சேர்த்து வேட்டியும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தோம். ஆனால் காலப்போக்கில் வேட்டி விற்பனை வெகுவாக குறைந்து விட்டதால், நாங்கள் உற்பத்தியையும் குறைத்து கொண்டோம். தற்போது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பயன்படுத்தும் கலர் வேட்டி மட்டுமே ஓரளவுக்கு விற்பனையாகிறது.

மேலும் எங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் வெளிமாநில ஆர்டர் இல்லாமல், விற்பனையாகாமல் கோடிக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன. ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை தாங்கி கொண்டு தொழிலை நடத்தி வருகின்றனர். தீபாவளியை போன்று பொங்கலுக்கும் எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கவில்லை. இதற்கிடையே நூல்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் தடுமாறும் எங்களுக்கு அரசு உதவிட வேண்டும். இளைஞர்கள் இடையே வேட்டி அணியும் பழக்கம் மீண்டும் அதிகரித்தால், எங்கள் தொழிலும் மேம்படும்.

கிராமப்புறங்களில் அதிகம்

நாமக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி:-

பாரம்பரிய உடைகள் என்பது நம் கலாசாரங்களில் ஒன்றாகும். பாரம்பரிய உடை அணிவது என்பது தற்போது கிராமங்களில் மட்டுமே அதிகளவில் காணப்படுகிறது. நகர்புறங்களில் மிக குறைவாகவே காண முடிகிறது. திருமண நிகழ்ச்சி, பொங்கல் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் வீட்டு விசேஷங்களின் போது உறவினர்கள் கூடினால் பாரம்பரிய உடைகளை பார்க்க முடிகிறது.

இன்றைய காலக்கட்டங்களில் பேண்ட், சர்ட், ஜீன்ஸ், டீ-சர்ட், லோயர், சார்ட்ஸ் அணிவதையே இளைஞர்கள் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒருவர் அணியும் உடையை பார்த்து நாமும் அணிய வேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக சினிமாவில் நடிகர், நடிகைகள் அணியும் உடைகளையே அணிய வேண்டும் என இளைஞர்கள், இளம்பெண்கள் விரும்புகிறார்கள். மீண்டும் பாரம்பரிய உடைகளுக்கு திரும்புவது என்பது சற்று கடினமான விஷயம் தான்.

அழுக்கு படிந்தால் தெரியாது

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் கேசவன்:-

இன்றைய காலக்கட்டத்தில் நவீன டிசைனில் ஆடைகள் அணிவது தான் வசதியாக இருக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஜீன்ஸ் பேண்ட் எத்தனை நாள் வேண்டும் என்றாலும் அணிந்து கொள்ளலாம். கறை, அழுக்கு படிந்தாலும் வெளியே தெரியாது. ஆனால் வேட்டியில் லேசாக கறை பட்டாலே அசிங்கமாக தெரியும். எங்களை போன்ற வாலிபர்களுக்கு ஒருசில மணி நேரங்களிலேயே வேட்டி அழுக்காகி விடுவதால், அதை கட்டுவதற்கு தயக்கமாக உள்ளது.

கிராமப்புறங்களில் வேண்டும் என்றால் பாரம்பரிய உடைகள் உகந்ததாக இருக்கலாம். எனவே தான் நாங்களும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் போது வேட்டி கட்டி மகிழ்கிறோம். ஆனால் நகர பகுதிகளில் பாரம்பரிய உடைகளை தொடர்ந்து அணிந்து செல்வது நிச்சயம் சிரமத்துக்குரியது தான்.

எக்காலத்திற்கும் ஏற்றது

வெண்ணந்தூரை சேர்ந்த கைத்தறி நெசவாளர் சாமிநாதன்:-

கைத்தறி ஆடைகள் தூய்மையான பருத்தி நூலில் நெய்யப்படுகிறது. எனவே கைத்தறி ஆடைகள் உடலுக்கு உகந்தது. வெயில், குளிர் போன்ற எக்காலத்திற்கும் ஏற்றதாகும். ஆனால் சர்வதேச வேட்டி தினத்தில் விசைத்தறி ஆடைகள் தான் அதிகம் விற்பனை ஆகின்றன. கைத்தறி ஆடைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது.

இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வேட்டி, சேலைகளை கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இளைய சமுதாயத்தினர் சர்வதேச வேட்டி தினத்தில் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிந்து எங்கள் தொழிலை ஊக்கப்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வேட்டி வாரம்

ஜனவரி 6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிக்கர சலுகைகளை அறிவித்து உள்ளன.

இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும் கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


Next Story