நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு.. கிராமம் வாரியாக கணக்கெடுப்பு பணி -கலெக்டர் தகவல்


நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு.. கிராமம் வாரியாக கணக்கெடுப்பு பணி -கலெக்டர் தகவல்
x

கனமழையால் நெல்லை, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நெல்லை,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மழை நின்றுள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடியத்தொடங்கியுள்ளது. இந்த வெள்ள பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது உடைமைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. கிராம வாரியாக கணக்கெடுப்பு நடைபெறும். வெள்ளச்சேதம் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் வெள்ள சேதங்கள் குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். ஆவணங்கள் இல்லாதவர்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலமாக ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கலாம். இந்த வெள்ளசேதம் கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story