ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், உயிர் பாதிப்பு இல்லையென்றாலும் ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு தொற்று

தற்போது கொரோனா தொற்றின் மறுதோற்றமாக ஒமைக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னை தியாகராயநகர் கிரி தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்த்து பேசினார். மேலும் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது நா.எழிலன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் எஸ்.மதன் மோகன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ் ஆகியோர் உடன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயிர்பாதிப்பு அச்சம் இல்லை

கொரோனா தொற்று மிதமான வகையில் ஏற்பட்டு பரவி வருகிறது. மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டில் சற்று கூடுதலாக தொற்று பரவுகிறது என்ற விஷயத்தை கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தமிழக அரசின் சார்பில், தொற்று தொடங்கிய கல்வி நிறுவனங்களில் நானும், செயலாளரும் உடனே நேரடியாக ஆய்வு செய்து அதை கட்டுக்குள் கொண்டு வந்தோம். அதேபோல் இப்போது வீடுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2, 3 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது சற்று அச்சத்தை தந்தாலும், உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை மிக கவனமாக இதை கையாண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இதுகுறித்து பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை.

வேகமாக பரவக்கூடியது

சென்னையில் 370 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகபட்சமாக 9 மற்றும் 13-வது மண்டலங்களில்தான் பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து மாநகராட்சி துறை அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

2-வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களுக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். இப்போது வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் பரவல் கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இப்போது பரவல் உள்ளது.

ஒமைக்ரான் மற்றும் அதோடு தொடர்புடைய 7 வகையான வைரஸ்கள் பெரிய அளவில் உயிர் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை இல்லை என்றாலும், வேகமாக பரவக்கூடியது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தாலும், அந்த குடும்பத்தினர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story